இடர் மேலாண்மையில் நான்கு படிநிலைகள் உள்ளன அவை
🌼preparedness - இடர் வரும் முன் தயார் நிலையில் இருப்பது
🌼response - பாதிப்பு ஏற்பட்டவுடன்/ ஏர்படவிருக்கும் பாதிப்பை உணர்ந்து எதிர்வினையாற்றுவது
🌼 recovery - அதனை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை
🌼mitigation - பேரிடரின் தீவிரத்தை மட்டுப்படுத்துவது.
பேரிடர் என்பது இயற்கை பேரிடர் அல்லது மனித செயல்பாடுகளால் செயற்கையாக ஏற்படுவது என இருவகையாக பிரிக்கலாம். ஆக இடர் மேலாண்மை துறை என்பது எவ்வகை பேரிடராக இருந்தாலும் அதற்கு தயார்நிலையில் இருந்து உடனுக்குடன் செயல்பட வேண்டும். ஆனால் நம் மாநிலத்தில் நிதர்சம் வேறாக உள்ளது. தமிழக அரசின் இடர்மேலாண்மை பட்டியலில் இயற்கை பேரிடர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளபட்டுள்ளது. அதன் விளைவுதான் வாலியும் குண்டானும் கொண்டு டன் கணக்கில் மிதந்த எண்ணெயை அப்புறபடுத்த உபயோகித்தோம். சென்னை சிக்ஸில் பற்றி எரிந்த தீயை அனைக்க உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது. அது தான் அப்படி என்றால் இயற்கை பேரிடர்களின் போது கனகச்சிதமாக செயல்படுவார்கள் என்று பார்த்தால் சுனாமியிலும் சென்னை வெள்ளத்திலும் மங்குனி ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் சொல்வதற்கு ஒன்றுமில்லை ரகம் தான். ஓகி புயலில் சிக்கிய குமரி மாவட்ட மாவட்ட மீனர்களை மீட்பதில் அவர்களின் செயல்தீவிரம் ஸ்லோமோஷன் சீனைவிட படு ஸ்லோ. இந்த திறமையான ஆட்சியாளர்களும் அவர்களின் சகாக்களும் அணுவுலை விபத்து நடந்தால் என்ன அழகாக எவ்வளவு வேகம் விவேகத்துடன் செயல்படுவார்கள் என்று நான் சொல்லி தெரியலை வேண்டியதில்லை. அணுவுலை விபத்து நடந்தால் அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் உங்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருக்குமாம். அட அப்பறம் என்னப்பா லைட்டா தீஞ்ச வாட வீசினாலும் பஸ் ஏறிட வேண்டியது தான்.
அட இருங்கப்பா இதையும் கேட்டுட்டு போங்க. கூடங்குளம் சுத்துபட்டி கிராமத்துல எத்தன உருப்படி இருக்காவனு கவர்மன்டுகே தெரியாதாம். அட பாவத்த! சரிரிரி தோராயமா ஒரு நாலஞ்சு பஸ் நிக்கும் அதுல ஏறி தப்பிச்சுகிடலாம். அதெல்லாம் நமக்கென்ன இப்ப? வரத வரப்ப பாத்துக்குவோம்.அடுத்த தேர்தல்லயும் வழக்கம் போல சின்னத்த பாத்து பொத்தான அமுக்கீருவோம். நமக்கு எதுக்கு வம்பு நாம இருக்க எடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்!!
புதன், 6 டிசம்பர், 2017
இடர் மேலாண்மை
திங்கள், 20 நவம்பர், 2017
பல்லி
நான் ரசித்த பல்லி....<3
விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம் எனக்கு...ஆனால் பல்லிகளை கண்டால் மட்டும் ஏனோ பிடிக்காது. சிறு வயதில் இருந்தே அதன் இனமே அறவே பிடிக்காது..... என்னை தேடி வந்து தொல்லை செய்வதாக தோன்றும்...
ஒரு நாள்....அனேகமாக நா அப்போ ஆறாவது படிச்சிட்டு இருந்தேன்னு நெனைக்கிறேன். அது லீவ் சமயம், நா, என் தம்பி, அப்பறம் என் செட்டு சொந்தக்கார பிள்ளைங்க ரெண்டு பேருன்னு நாங்க நாலுபேரும் மும்மறமா விளையாடிட்டு இருந்தோம். சாயந்தர நேரம்னால வீட்டிக்குள்ளையே தான் விளையாடினோம். நா சுவத்துல சாய்ஞ்சு உக்காந்திருந்தேன் மத்தவங்க எனக்கு எதிர்ல உக்காந்திருந்தாங்க. அன்னிக்கு ஒரு மஞ்ச கலர் ஃபிரில் வைச்ச ப்ராக் போட்ருந்தேன். சட்டையில முன்புறம் ஒரு பெரிய பாக்கெட் போல இருக்கும். இவ்ளோ கரைக்டா ஞாபகம் வச்சிருக்கேன்னு ஆச்சர்யமா இருக்கா? அவசரபடாதீங்க அதுக்கு காரணம் இருக்கு.....
சரி அதை விடுங்கப்பா கதைக்கு வாங்க. ஏதோ செட்டு விளையாட்டு விளையாடி சிரிச்சிட்டு இருந்தோம்...அப்போ என் தலைக்கி மேல சுவத்துல ரெண்டு பல்லிங்க சண்டபிடிச்சிட்டு இருந்தத நாங்க யாரும் கவனிக்கல. அவங்க சண்ட போட்டு உருண்டு விழ நானாகெடச்சேன் ? ரெண்டு பேரும் (பல்லீஸ்) என் மேல விழுந்துட்டாங்க....அவ்வளோதான் நாலு பேரும் போட்ட கூச்சல்ல வீட்டில இருந்த எல்லாரும் வந்துட்டாங்க. ரொம்ப நேரம் கத்தி அழுதுட்டு, அப்பறம் அம்மா மடியில படுத்துகிட்டேன். அம்மா வாஞ்சையா தலையை வருடிவிட்டு பயப்படாதனு தைரியம் சொன்னாங்க.
அட இருங்க பா.... கத இன்னும் முடியல.....
கவிதா கொஞ்சம் சமாதானம் ஆகீட்டா...! ஆனாலும் கண்ணில் ஈரம் காயல. அப்போ வயித்துல ஒரு வித்யாசமான உணர்வு. எனக்கு ஒன்னும் புரியல.
அட ஏதோ பிரம்மை....
மறுபடி அம்மா மடியில சாஞ்சிகிட்டேன்....எல்லாரும் என்ன கொழப்பமா பாத்தாங்க...இல்ல இல்ல மறுபடி ஏதோ வயிறு பக்கம் அசைவு...?!
இப்போ தெளிவா தெரிஞ்சது.
வயிறுக்கு உள்ள இல்ல வெளிய, ஆனா சட்டைக்குள்ள....!
மீண்டும் முண்டுது...தைரியத்தை வரவழச்சிட்டு மெல்ல எழுந்து ப்ராக் பாக்கெட்ட விலக்கி பாத்தா....
அட பாவிகளா!
நீங்க இங்கயாடா இருக்கீங்க....???
ஆமா பாஸ் :( சண்ட போட்ட பல்லிங்க ரெண்டும் சட்ட ஜோப்புக்குள்ள தான் இருந்திச்சுங்க....
சட்ட பாக்கெட்ட ஒதறி விட்டுட்டு அலறினே பாருங்க.....என்னால அவ்வளோ பெருசா அலறமுடியும் அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.....அப்போல இருந்து பல்லினா என் ஜென்ம விரோதி தான். ஆனாலும் என்னனா ரொம்ப வெறுப்பேத்தும்....நான் தூங்கும்போது என் மேல ஏறி க்ராஸ்பன்னி போவாப்ல, கதவுல இருந்து என் மேல ஜம்ப் பன்னும், மொறச்சி பாத்து வால சொழட்டும்...இப்புடி தேடி வந்து வம்பிழுக்கும்...எங்க வீட்ல உள்ள எல்லாரும் அதென்ன உன் கண்ணுக்கு மட்டும் பல்லி எங்க இருந்தாலும் தெரியிதுனு கேப்பாங்க...அப்டி நோட்டம் விடுவேன்.....என்ன தான் எனக்கு பல்லி பிடிக்காட்டாலும் வன்முறைலலாம் எறங்கினதில்ல. அதபாத்து நா மொறைக்கறதும் என்ன பாத்து அது வால முறுக்குறதும்னு ஒன்லி மைண்டுவாய்ஸ்லயே சண்டபோட்டுப்போம்.
இப்படி இருந்த எனக்கு பல்லி பிடிச்சுபோக காரணமா இருத்தவங்க என் கல்லூரி பேராசிரியை சகுந்தலா மேடம் தான்...பல்லினா வீட்ல இருக்க house lizard மட்டுமில்ல அந்த குடும்பமே நமக்கு ஆகாம இருந்துச்சு...
ஓணன்னா சொல்லவே வேணாம் அறவே புடிக்காது. இந்த அழகுல காலேஜ் II இயர்ல ஓணான டிசெக்ட் செய்யனும்...நான் எவ்வளோ பாவம்! வேற வழி? மார்க் போயிருமே!! வடிவேலு சொல்றமாதிரி உசுப்பேத்தியே நல்லா செய்ய வச்சிருவாங்க எங்க பேராசிரிய பெருமக்கள். ஆனாலும் பல்லினா பிடிக்காது. இப்டி இருந்த நா சகுந்தலா மேடம் இந்த பறக்கும் பல்லிகள பத்தி வருணிச்ச விதம் வாழ்க்கைல மொதோ முறையா எனக்கே அந்த பல்லிகள பாக்கணும்னு ஆசை வந்துச்சு....எப்பவுமே அவங்க பாடம் நடத்தினா கண்டிப்பா அந்த விலங்க நாம இதுக்கு முன்னாடி பாத்திருக்கோமோ இல்லையோ ஆனா நாம கண்ணு முன்ன அந்த கற்பனை பிம்பத்த கொண்டு வந்துருவாங்க. பல்லி அழகா பேராசூட் போட்ட மாதிரி பறந்தா எப்படி இருக்கும்! அதுவும் அழகழகான கலர்ல!!! வாவ்...<3 இப்படி அருமையா பாடம் நடத்தி, இவன் இனத்தை ஏன் நாம வெறுத்தோம் அப்டினு யோசிக்க வச்சிட்டாங்க...சொல்லப்போனா நீ கத்தின சவுண்டுல பயந்து போயி தான் உன் சட்ட பாக்கெட்ல ஒளிஞ்சிருந்துக்கும் பாவம் அப்டினு கரிசனமே வந்துட்டு...... அப்படி தான் பாஸ் பல்லி இனமே பிடிக்காத எனக்கு இந்த பறக்கும் பல்லி பிடிச்சிப்போன கத...
இன்னொரு விஷயம் சொல்லவா...இப்பவும் என் வீட்டு கேட்டுல ஒரு குட்டி ஓணன் வந்து உக்காந்திருக்கும்...தினமு என்ன பாத்து ஓடி போய் ஒளிஞ்சுக்கும்...பட் முன்னமாதிரி இவங்கள நா வெறுக்கறதில்ல...என்ன பாத்து கண்ணாமூச்சி ஆட்ற அந்த குட்டிபயல பாத்தா சிரிப்பும் வியப்பும் தான் வருது....:);)
அணுவுலை பலிகள்!
கிமுராவின் அழகிய குடும்பத்தை ஆழிப்பேரலையும் அணுவுலை விபத்தும் நிர்மூலமாக்கிவிட்டிருந்த நிலையில். தன் தந்தை மற்றும் மனைவியின் சடலங்கள் கிடைத்த பின் தன் ஆசை மகள் யூனா மட்டும் காணாமல் போனவர்கள் பட்டியலில் நீடிக்க, என் மகள் எங்கோ உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கை ஒரு பக்கம் இல்லை அவளும் இறந்திருப்பாளோ என்ற பயம் மறுபக்கம் என்ற உணர்ச்சிப்போராட்டத்தினூடே பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வாழ்ந்த ஒஃகுமா நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தன் ஆறு வயது மகளின் நிலை அறியாமல் கிமுரா தினம் தினம் கலங்கி போனார். ஒரு வழியாக ஒஃகுமா நகருக்கு மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டனர். நம்பிக்கை துளிர்த்தவராக தன் அன்பு மகளை தேடியவருக்கு அவள் அணிந்திருந்த தலைக் குள்ளா மட்டும் தான் முதலில் கிடைத்தது. பிறகு தொடர்ந்து தேடியதன் விளைவால் கழுத்து மற்றும் தாடை எழும்புகள் கிடைத்தது. மரபணு சோதனையில் அவை யூனாவுடையது என்பது ஊர்ஜிதமானது. ஆனாலும் என் மகளின் முழு உடல் பாகங்கள் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று உறுதியோடிருந்து, அத்துயர சம்பவம் நிகழ்ந்து ஆறு வருடங்களுக்கு பின் தன் மகளின் முழு உடல் பாகங்களையும் கண்டுபிடித்திருக்கிறார். டெப்கோவின் மீதும் அரசாங்கதின் மீதும் அளவிடமுடியாத கோபம் எனக்கு உண்டு என்கிறார் கிமுரா. ஒரு தந்தையாய் அவருடைய நிலை மிக துயரமானது. அதை விதி என்றோ காலத்தின் கட்டாயம் என்றோ கடந்து போய்விட முடியாது. அது அரசால் ஏய்க்கப்பட்ட குடிமக்களின் பிரதிநிதித்துவ குரல். இனி எப்போதும் ஒரு தந்தை தன் மகனையோ மகளேயோ இப்படி சதை எழும்பு கூறுகளாய் தேடும் அவலம் நேர்ந்து விடக்கூடாது என்பதன் எச்சரிக்கை குரல். இதுபோல மனதை கசக்கி பிழியும் சம்பவங்கள் ஏராளம். நாம் எப்போதும் போல வேடிக்கை பார்ப்போம். வேறென்ன செய்ய முடியும் நம்மால்?
https://dunrenard.wordpress.com/2016/12/26/fukushima-dad-finds-remains-of-daughter-but-no-closure-for-311/
கழுதை!
இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு அருகே சில கழுதைகளை பார்க்க நேர்ந்தது. அது என்னவோ எனக்கு சில விலங்குகளை பார்த்தால் பாவமாக இருக்கும். எப்போதும் விலங்குகளின் கண்களை தான் உற்று நோக்குவேன். அந்த கண்களில் ஆயிரம் ஆயிரம் சொல்லப்படாத இரகசியங்கள் ஒழிந்திருக்கும். அவற்றின் அன்பையும் பிரியத்தையும் வலியையும் வேதனையையும் கண்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். அப்படி பார்க்கும் போது எப்போதும் சோகத்துடன் இருப்பதாக விழிமொழியை ஏற்படுத்தும் இரண்டு ஜீவன்கள் கழுதையும் எருமையும். இது என் தனிப்பட்ட எண்ணம். அப்படி இல்லாமல் கூட இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் எனக்கு அவைகளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இப்படித்தான் தோன்றும். உடனே உள்ளம் கசிய ஆரம்பித்துவிடும். ஏன் இந்த விலங்குகளை பெரும்பாலானோர்க்கு பிடிப்பதில்லை என்ற கேள்வி எழும். அப்படித்தான் அன்றும் தோன்றியது.
எப்போதும் எனக்கு எழும் சிறுபிள்ளை தனமான கேள்விகளை அம்மாவிடம் தான் கேட்பது வழக்கம். அவங்க தானே திட்டாமல் பதில் சொல்லும் ஒரே ஆள். அன்றும் அம்மாவிடம் கேட்டேன், 'அம்மா ஏன்மா இந்த கழுதைகளை யாருக்கும் பிடிக்கமாடேங்குது?' அதற்கு அம்மாவுக்கு சரியாக பதில் தெரியவில்லை அதனால் ஒரு சில பதில்களை சொன்னார். 'அதுவா? அது அசிங்கமா இருக்குல்ல அதான்' என்றார். எனக்கு சிறு வயதில் இருந்தே கழுதை என்றால் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அம்மா கழுத எவ்ளோ அழகா இருக்குல்ல ..அதோட குட்டி கழுத ரொம்ப ரொம்ப அழகு.. இப்படி சொல்லிக்கொண்டிருப்பேன். என்னிடம் அழகில்லை என்றால் விடுவேனா? அம்மா நல்லா பாருங்க அது குட்டியா அழகா தான் இருக்கு என்றேன். ஓ.. ஒரு வேல அழுக்கு மூட்ட சொம்க்கவும் பிடிக்காதோ என்னவோ என்றார்...எனக்கு அதற்கு மேல் கேள்வி கேட்டு அம்மாவை நச்சரிக்க விருப்பமில்லை. ஆகவே விட்டு விட்டேன்.
முகநூலில் விசயம் தெரிந்த பலர் நம் நட்பு பட்டியலில் இருக்கிறார்களே அப்புறம் என்ன? போடு ஒரு நிகழ்தகவையை என்று முடிவு செய்து 'கழுதய ஏன் நிறையபேருக்கு பிடிக்கமாட்டேன்து?' என்று எழுதினேன். பல கேலியான பதில்களும் சில சீரியஸான பதில்களும் வந்தன. அவற்றிலும் முழு சமாதானம் அடையவில்லை. ஒரு சில நண்பர்கள் அவை தாழ்த்தப்பட்ட மக்களுடனே புழங்கியதால் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். அவையும் உறுதியாக சொல்லப்படவில்லை. பிறகு ஜீயோ டாமின் அண்ணா இதே கருத்தை ஒரு கட்டுரையில் தான் படித்தாக முன் வைத்தார். அக்கட்டுரையின் சாரமாக அவர் குறிப்பிட்ட கருத்துகள் என்னை மனத்துயரில் ஆழ்த்தியது. அதாவது கழுகு களில் முழுவதும் கருப்பு நிறத்தில் இருபவற்றை பறக்கழுகு என்றும் (pariah kite) கழுத்துப் பகுதி மட்டும் வெண்மையாக இருப்பை பிராமணக்கழுகு என்றும் (Brahmini kite) பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்றும். தனக்கு பிடிக்காத விலங்குகளையும் இப்படி ஒடுக்கப்பட்ட சாதிய பெயரைக்கொண்டு அழைப்பார்கள் என்றும், அவை சாதிய வெறுப்பின் தாக்கம் என்றும் அக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார். கழுதைகளை வெறுப்பதற்கு இத்தகையதொரு காரணமாக இருக்கலாம் ஏனென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுடனே அவை இருந்ததால் அத்தகைய வெறுப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். இப்படியும் ஒரு இழிநிலை இருக்க முடியுமா? தன் தேவைகளை தீர்ப்பதற்காகவே ஒரு சாராரை ஒதுக்கி வைத்து. தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொண்டு அவர்களை உணர்ச்சியற்ற ஒரு ஜந்துக்களாய் பாவித்து மனதளவில் கூனிக்குறுகச்செய்து அவர்கள் ஆசைகளை பொசுக்கி கனவுகளை நிர்முலமாக்கி சொல்லொன்னா துயரத்தை தந்துவிட்டு. இந்தக் கொடுமைகள் போதாதென்று தனக்கு பிடிக்காத தாழ்த்தப்பட்ட மக்களுடன் வாழ்ந்த ஒரே காரணத்தால் தன் புறக்கணிப்பையும் வெறுப்பையும் ஒன்றும் அறியாத ஜீவராசிகளின் மேல் காலத்திற்கு நிலைத்து நிற்கும்படியான நிலை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால்? அவர்களை விட ஈனப்பிறவு இப்புவியில் இருக்க முடியுமா. எத்தகையதொரு அருவருக்க தக்க செயல் இது?
அன்று தான் படிப்பறிவு போதுமான அளவு இல்லை என்று நினைத்தால். இன்றைய நிலை அதனினும் மோசம் என்று ஓங்கி அறைந்தார் போல் உணரவைத்தது இன்று நடந்த ஒரு சம்பவம். நான் இந்த கழுகு சமாச்சாரத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொண்டு புலம்பிக்கொண்டிருந்தேன். அவரும் அப்படியா இப்படி கூடவா சாதியை முன்னிருந்தி விலங்குகளுக்கு பெயர் வைப்பார்கள் என்று ஆதங்கப்பட்டார். சற்று நேரத்திற்கு பின் இந்த கதையை இன்னொரு தோழியிடம் இவர் சொல்ல அந்த அறிவு ஜீவி சொன்ன பதில் என்ன தெரியுமா? அதுவா அது வேறொன்றுமில்லை பறக்கழுகு அசிங்கங்களை உண்பதாம் பிராமணக்கழுகு நல்ல உணவை உணவை உண்பதாம். அதனால் அப்படி பேர்வைத்திருப்பார்களாம். அவர்களின் அறிவுத்திறமை என்னை திக்குமுக்காட செய்துவிட்டது! பிறகென்ன?! கழுகுகள் பொதுவாக மாமிச உண்ணிகள். அதென்ன பிராமணக்கழுகு மட்டும் வடைபாயாசமா சாப்பிட போகிறது? படிப்பும் பட்டமும் மனிதர்களை முற்போக்காக சிந்திக்கவைக்க வேண்டும். அப்படி சிந்திக் தூண்டாத படிப்பும் பட்டமும் வெறும் காகிதம் தான்.
விவேக் சொல்வதைப்போல் இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.
பில்லு
நான் வீட்டிற்கு வந்தால் அதிகம் மகிழ்ச்சி அடைபவன் இவன் தான். எந்த எதிர்பார்ப்பும் வற்புறுத்தலும் இல்லாத கலப்படமற்ற அன்பு அவனுடையது. அப்படி ஒரு உற்சாகம் ததும்ப வரவேற்பான். என் செல்ல பில்லு <3. பயல் குள்ளமாக இருந்தாலும் சந்தோஷம் வந்தால் தன் உயரம் போல் இரு மடங்கு தாவுவான். காலையில் அப்பாவுடன் நடை பயிற்சிக்கு செல்வது அவனுக்கு மிக மிக களிப்பான விசயம்😍. அப்போது அப்பாவை தவிர வேறு யாரையும் சட்டை செய்யமாட்டான்😏. வீட்டிற்க்கு வெளியே இருப்பது இவனுக்கு அறவே பிடிக்காது. அப்போது விவரமாய் என்னையோ தம்பியையோ துணைக்கு அழைப்பான்.💧 தண்ணீர் என்றால் எதிரிதான்😠. குளிக்க வைப்பதற்க்குள் பாடாய்படுத்தி விடுவான்😓. கொஞ்சினால் வாலை ஆட்டி செல்லம் கொஞ்சுவான்😍😘. திட்டினால் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு மூலையில் போய் படுத்துக்கொள்வான்😒😔. இவனுக்கு எப்போதும் எங்களுடனே இருக்கவேண்டும், வெளியே போக சொன்னால் முகம் வாடிவிடும்😞. வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் ஆதரவாய் அருகிலே இருப்பான் சுற்றிச்சுற்றி வந்து முகம் பார்ப்பான்💓. வீட்டைக் சுத்தம் செய்ய துடைப்பத்தை எடுத்தால் உடனே எழுந்து வெளியே சென்றுவிடுவான். நானும் தம்பியும் கணினியிலோ தொலைக்காட்சியிலோ மூல்கிவிட்டால் அம்மா வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் சற்று வெளியே செல்லுங்கள் என்று எவ்வளவு சொன்னாலும் காதில் வாங்காமல் அமர்ந்திருப்போம். அது போன்ற சமயங்களில் எங்களிடம் அம்மா, ஐந்தறிவு ஜீவனுக்கு இருக்கும் அறிவில் பாதி கூட நான் பெற்ற பிள்ளைகளுக்கு இல்லை என்பார். அப்படி அவ்வப்போது தன் புத்தி சாதுர்யத்தால் எங்களை அம்மாவிடம் மாட்டிவிடுவான். நான் ஈரோட்டிற்க்கு கிளம்பும் போது எப்படியும் கண்டுபிடித்துவிடுவான். அன்று மட்டும் நான் சொல்வதை கேட்கவே மாட்டான். கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக்கொண்டு வெளியே வரமாட்டான். பில்லு, அக்கா ஊருக்கு கிளம்புகிறேன் என்று நான் சொன்னால் சோகமாய் முகத்தை திருப்பிக்கொள்வான். திரும்பி கூட பார்க்க மாட்டான். 📱தொலைபேசியில் எங்கள் குரல் கேட்டால் கூட அடையாளம் கண்டு கொண்டு வாலாட்டுவான். அப்பாவின் பைக் சத்தத்தை தொலைவில் வரும்போதே கண்டுபிடித்து அவருக்காக வாசலில் போய் நின்று வரவேற்பான். இவனை நானும் அப்பாவும் ஒரு உறவினர் வீட்டில் இருந்து எடுத்து வந்தோம். அப்போது அம்மாவிற்கு இவனை கண்டாலே பிடிக்காது. ஆனால் இப்போது நிலைமையே வேறு. தன் 💝பாசத்தால் எங்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்😘😘😘. அவனுடனான எங்கள் உலகம் மிக மிக அழகானது.
'பெண்ணியவாதி'
அன்று எனக்கான இரண்டாவது பாடவேலையில் வழக்கம் போல உற்சாகத்தோடு மாணவிகளுக்கு வகுப்பெடுக்க சென்றேன். மாணவிகளை சந்திப்பதே தனி மகிழ்ச்சியும் உற்சாகமும் தான். அது முதன்மை பாடம் கிடையாது மல்டி ஸ்கில் டெவலப்மெண்ட் என்ற பொதுப் பாடம். அதல் மாணவிகள் நேர்காணல் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள தேவையான விசயங்களை பாடமாக எடுப்போம். அதில் ஒரு பகுதி one word substitute. ஒரு வாக்கியத்தில் விளங்கிக்கொள்ள கூடிய விசயத்தை ஒரே வார்த்தையை கொண்டு ஈடு செய்யவேண்டும். உதாரணமாக A person who loves mankind and involve himself in charitable act - philanthropist. இதை போல ஒரு சில வாக்கிங்களையும் அவ்வாக்கியத்திற்கு நிகரான ஒற்றை வார்த்தையையும் விளக்கிக் கொண்டிருந்தேன். இடை இடையே அவர்களை சோதிக்கும் விதமாக சில எளிய வார்த்தைகளையும் அதன் பொருளையும் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு வந்தது சோதனை! சில வார்த்தைகளுக்கு எளிதில் பதில் சொன்னார்கள் சிலவற்றிற்க்கு திணறினர். சரி என்று அடுத்தாக இந்த வார்த்தை உங்களுக்கு நிச்சயம் பரிச்சயமானதாக இருக்கும் இதற்கு பொருள் கூறுங்கள் என்று சொல்லி feminist என்று கரும்பலகையில் எழுதினேன். எழுதி முடித்துவிட்டு இரண்டு மூன்று முறை உச்சரித்துவிட்டு ம்ம் சொல்லுங்களப்பா feminist என்றால் என்ன? என்றேன். ஒருவருக்கும் அவ்வார்த்தையே தெரியவில்லை. அரண்டு போனேன். நான் வகுப்பெடுத்துக்கொண்டிருப்பது ஈரோட்டில், பெரியார் பிறந்த ஈரோட்டில்!!! குறைந்த பட்சம் தமிழாக்கம் செய்திருந்தால் கூட பரவாயில்லை அவ்வார்த்தையை நாங்கள் கேள்வி பட்டதே இல்லை என்று சொன்னார்கள். எனக்கு பெருத்த கவலையும் கோபமும் எனக்கு வந்துவிட்டது. பொதுவாக மாணவிகளிடம் கோபமுடன் பேச மாட்டேன். அன்று சுன்னாம்பு கட்டியை கீழே எரிந்து விட்டு. டேய் (என் மாணவிகளை வழக்கமாக அப்படித்தான் அழைப்பேன்) இன்னிக்கு நீங்களு நானு இங்க இப்படி சுகந்தரமா இருக்க காரணம் பெமினிட்டுகள் தான். பல பேர் நமக்காக போராடீட்டு இருக்காங்க ஆனா நாம அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாம முழிக்கிறோம். பெரியார் பிறந்த ஊரில இருந்துட்டு உங்க அறியாமை வருத்தப்பட வைக்கிது. சரி இதாவது தெரியுமா, பெரியாருக்கு பெரியார் என்டு பட்டம் கொடுத்ததே பெண்கள்தான் என்று நான் சொல்ல, பிள்ளைகள் விழி விரிய என்னை பார்த்தனர். அந்த தகவல் தங்களுக்கு புதியது என்றனர். அதுவரை பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் பிரச்சனை என்று நினைத்திருந்த எனக்கு முற்றிலும் நம்பிக்கை போயே போய்விட்டது. மிக மிக வருத்தப்பட்டேன். கொஞ்சமேனும் உங்களை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கோங்க, பிறகு குறைந்தபட்சம் நம் ஊரின் வரலாறு நமக்காக போராடியவர்கள் பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். ஆனாலும் மனம் ஏற்க மறுக்கிறது படித்த பெண் பிள்ளைகளின் இந்த அறியாமையை. எங்கே தவறு நடக்கிறது. வெறும் பட்டம் மட்டும் வாங்கி என்ன செய்வது? இவர்கனின் நிலைக்கு பெற்றோரும் முக்கிய காரணம். தேவையில்லாத விசயங்களை ஊட்டி வளர்க்கிறார்கள். அவசியமான விசயங்களை கடுகளவும் சொல்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் பலர் டயம் பாஸ்காக ஆசிரியர் பணிக்கு வருவதாக தாங்களே பகிரங்கமாக பெருமையடித்துக் கொள்கிறார்கள். இந்த பக்கம் இப்படி இருக்க மாணவிகளை குறை சொல்லி ஒரு பயணும் இல்லை தான்.