திங்கள், 20 நவம்பர், 2017

கழுதை!

இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு அருகே சில கழுதைகளை பார்க்க நேர்ந்தது. அது என்னவோ எனக்கு சில விலங்குகளை பார்த்தால் பாவமாக இருக்கும். எப்போதும் விலங்குகளின் கண்களை தான் உற்று நோக்குவேன். அந்த கண்களில் ஆயிரம் ஆயிரம் சொல்லப்படாத இரகசியங்கள் ஒழிந்திருக்கும். அவற்றின் அன்பையும் பிரியத்தையும் வலியையும் வேதனையையும் கண்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். அப்படி பார்க்கும் போது எப்போதும் சோகத்துடன் இருப்பதாக விழிமொழியை ஏற்படுத்தும் இரண்டு ஜீவன்கள் கழுதையும் எருமையும். இது என் தனிப்பட்ட எண்ணம். அப்படி இல்லாமல் கூட இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் எனக்கு அவைகளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இப்படித்தான் தோன்றும். உடனே உள்ளம் கசிய ஆரம்பித்துவிடும். ஏன் இந்த விலங்குகளை பெரும்பாலானோர்க்கு பிடிப்பதில்லை என்ற கேள்வி எழும். அப்படித்தான் அன்றும் தோன்றியது.

எப்போதும் எனக்கு எழும் சிறுபிள்ளை தனமான கேள்விகளை அம்மாவிடம் தான் கேட்பது வழக்கம். அவங்க தானே திட்டாமல் பதில் சொல்லும் ஒரே ஆள். அன்றும் அம்மாவிடம் கேட்டேன், 'அம்மா ஏன்மா இந்த கழுதைகளை யாருக்கும் பிடிக்கமாடேங்குது?' அதற்கு அம்மாவுக்கு சரியாக பதில் தெரியவில்லை அதனால் ஒரு சில பதில்களை சொன்னார். 'அதுவா? அது அசிங்கமா இருக்குல்ல அதான்' என்றார். எனக்கு சிறு வயதில் இருந்தே கழுதை என்றால் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அம்மா கழுத எவ்ளோ அழகா இருக்குல்ல ..அதோட குட்டி கழுத ரொம்ப ரொம்ப அழகு.. இப்படி சொல்லிக்கொண்டிருப்பேன். என்னிடம் அழகில்லை என்றால் விடுவேனா? அம்மா நல்லா பாருங்க அது குட்டியா அழகா தான் இருக்கு என்றேன். ஓ.. ஒரு வேல அழுக்கு மூட்ட சொம்க்கவும் பிடிக்காதோ என்னவோ என்றார்...எனக்கு அதற்கு மேல் கேள்வி கேட்டு அம்மாவை நச்சரிக்க விருப்பமில்லை. ஆகவே விட்டு விட்டேன்.

முகநூலில் விசயம் தெரிந்த பலர் நம் நட்பு பட்டியலில் இருக்கிறார்களே அப்புறம் என்ன? போடு ஒரு நிகழ்தகவையை என்று முடிவு செய்து 'கழுதய ஏன் நிறையபேருக்கு பிடிக்கமாட்டேன்து?' என்று எழுதினேன். பல கேலியான பதில்களும் சில சீரியஸான பதில்களும் வந்தன. அவற்றிலும் முழு சமாதானம் அடையவில்லை. ஒரு சில நண்பர்கள் அவை தாழ்த்தப்பட்ட மக்களுடனே புழங்கியதால் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். அவையும் உறுதியாக சொல்லப்படவில்லை.  பிறகு ஜீயோ டாமின் அண்ணா இதே கருத்தை ஒரு கட்டுரையில் தான் படித்தாக முன் வைத்தார். அக்கட்டுரையின் சாரமாக அவர் குறிப்பிட்ட கருத்துகள் என்னை மனத்துயரில் ஆழ்த்தியது. அதாவது கழுகு களில் முழுவதும் கருப்பு நிறத்தில் இருபவற்றை பறக்கழுகு என்றும் (pariah kite) கழுத்துப் பகுதி மட்டும் வெண்மையாக இருப்பை பிராமணக்கழுகு என்றும் (Brahmini kite) பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்றும். தனக்கு பிடிக்காத விலங்குகளையும் இப்படி ஒடுக்கப்பட்ட சாதிய பெயரைக்கொண்டு அழைப்பார்கள் என்றும்,  அவை சாதிய வெறுப்பின் தாக்கம் என்றும் அக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார். கழுதைகளை வெறுப்பதற்கு இத்தகையதொரு காரணமாக இருக்கலாம் ஏனென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுடனே அவை இருந்ததால் அத்தகைய வெறுப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். இப்படியும் ஒரு இழிநிலை இருக்க முடியுமா? தன் தேவைகளை தீர்ப்பதற்காகவே ஒரு சாராரை ஒதுக்கி வைத்து. தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொண்டு அவர்களை உணர்ச்சியற்ற ஒரு ஜந்துக்களாய் பாவித்து மனதளவில் கூனிக்குறுகச்செய்து அவர்கள் ஆசைகளை பொசுக்கி கனவுகளை நிர்முலமாக்கி சொல்லொன்னா துயரத்தை தந்துவிட்டு. இந்தக் கொடுமைகள் போதாதென்று தனக்கு பிடிக்காத தாழ்த்தப்பட்ட மக்களுடன் வாழ்ந்த ஒரே காரணத்தால் தன் புறக்கணிப்பையும் வெறுப்பையும் ஒன்றும் அறியாத ஜீவராசிகளின் மேல் காலத்திற்கு நிலைத்து நிற்கும்படியான நிலை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால்? அவர்களை விட ஈனப்பிறவு இப்புவியில் இருக்க முடியுமா. எத்தகையதொரு அருவருக்க தக்க செயல் இது?

அன்று தான் படிப்பறிவு போதுமான அளவு இல்லை என்று நினைத்தால். இன்றைய நிலை அதனினும் மோசம் என்று ஓங்கி அறைந்தார் போல் உணரவைத்தது இன்று நடந்த ஒரு சம்பவம். நான் இந்த கழுகு சமாச்சாரத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொண்டு புலம்பிக்கொண்டிருந்தேன். அவரும் அப்படியா இப்படி கூடவா சாதியை முன்னிருந்தி விலங்குகளுக்கு பெயர் வைப்பார்கள் என்று ஆதங்கப்பட்டார். சற்று நேரத்திற்கு பின் இந்த கதையை இன்னொரு தோழியிடம் இவர் சொல்ல அந்த அறிவு ஜீவி சொன்ன பதில் என்ன தெரியுமா? அதுவா அது வேறொன்றுமில்லை பறக்கழுகு அசிங்கங்களை உண்பதாம் பிராமணக்கழுகு நல்ல உணவை உணவை உண்பதாம். அதனால் அப்படி பேர்வைத்திருப்பார்களாம். அவர்களின் அறிவுத்திறமை என்னை திக்குமுக்காட செய்துவிட்டது! பிறகென்ன?! கழுகுகள் பொதுவாக மாமிச உண்ணிகள். அதென்ன பிராமணக்கழுகு மட்டும் வடைபாயாசமா சாப்பிட போகிறது? படிப்பும் பட்டமும் மனிதர்களை முற்போக்காக சிந்திக்கவைக்க வேண்டும். அப்படி சிந்திக் தூண்டாத படிப்பும் பட்டமும் வெறும் காகிதம் தான்.
விவேக் சொல்வதைப்போல் இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக