அன்று எனக்கான இரண்டாவது பாடவேலையில் வழக்கம் போல உற்சாகத்தோடு மாணவிகளுக்கு வகுப்பெடுக்க சென்றேன். மாணவிகளை சந்திப்பதே தனி மகிழ்ச்சியும் உற்சாகமும் தான். அது முதன்மை பாடம் கிடையாது மல்டி ஸ்கில் டெவலப்மெண்ட் என்ற பொதுப் பாடம். அதல் மாணவிகள் நேர்காணல் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள தேவையான விசயங்களை பாடமாக எடுப்போம். அதில் ஒரு பகுதி one word substitute. ஒரு வாக்கியத்தில் விளங்கிக்கொள்ள கூடிய விசயத்தை ஒரே வார்த்தையை கொண்டு ஈடு செய்யவேண்டும். உதாரணமாக A person who loves mankind and involve himself in charitable act - philanthropist. இதை போல ஒரு சில வாக்கிங்களையும் அவ்வாக்கியத்திற்கு நிகரான ஒற்றை வார்த்தையையும் விளக்கிக் கொண்டிருந்தேன். இடை இடையே அவர்களை சோதிக்கும் விதமாக சில எளிய வார்த்தைகளையும் அதன் பொருளையும் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு வந்தது சோதனை! சில வார்த்தைகளுக்கு எளிதில் பதில் சொன்னார்கள் சிலவற்றிற்க்கு திணறினர். சரி என்று அடுத்தாக இந்த வார்த்தை உங்களுக்கு நிச்சயம் பரிச்சயமானதாக இருக்கும் இதற்கு பொருள் கூறுங்கள் என்று சொல்லி feminist என்று கரும்பலகையில் எழுதினேன். எழுதி முடித்துவிட்டு இரண்டு மூன்று முறை உச்சரித்துவிட்டு ம்ம் சொல்லுங்களப்பா feminist என்றால் என்ன? என்றேன். ஒருவருக்கும் அவ்வார்த்தையே தெரியவில்லை. அரண்டு போனேன். நான் வகுப்பெடுத்துக்கொண்டிருப்பது ஈரோட்டில், பெரியார் பிறந்த ஈரோட்டில்!!! குறைந்த பட்சம் தமிழாக்கம் செய்திருந்தால் கூட பரவாயில்லை அவ்வார்த்தையை நாங்கள் கேள்வி பட்டதே இல்லை என்று சொன்னார்கள். எனக்கு பெருத்த கவலையும் கோபமும் எனக்கு வந்துவிட்டது. பொதுவாக மாணவிகளிடம் கோபமுடன் பேச மாட்டேன். அன்று சுன்னாம்பு கட்டியை கீழே எரிந்து விட்டு. டேய் (என் மாணவிகளை வழக்கமாக அப்படித்தான் அழைப்பேன்) இன்னிக்கு நீங்களு நானு இங்க இப்படி சுகந்தரமா இருக்க காரணம் பெமினிட்டுகள் தான். பல பேர் நமக்காக போராடீட்டு இருக்காங்க ஆனா நாம அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாம முழிக்கிறோம். பெரியார் பிறந்த ஊரில இருந்துட்டு உங்க அறியாமை வருத்தப்பட வைக்கிது. சரி இதாவது தெரியுமா, பெரியாருக்கு பெரியார் என்டு பட்டம் கொடுத்ததே பெண்கள்தான் என்று நான் சொல்ல, பிள்ளைகள் விழி விரிய என்னை பார்த்தனர். அந்த தகவல் தங்களுக்கு புதியது என்றனர். அதுவரை பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் பிரச்சனை என்று நினைத்திருந்த எனக்கு முற்றிலும் நம்பிக்கை போயே போய்விட்டது. மிக மிக வருத்தப்பட்டேன். கொஞ்சமேனும் உங்களை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கோங்க, பிறகு குறைந்தபட்சம் நம் ஊரின் வரலாறு நமக்காக போராடியவர்கள் பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். ஆனாலும் மனம் ஏற்க மறுக்கிறது படித்த பெண் பிள்ளைகளின் இந்த அறியாமையை. எங்கே தவறு நடக்கிறது. வெறும் பட்டம் மட்டும் வாங்கி என்ன செய்வது? இவர்கனின் நிலைக்கு பெற்றோரும் முக்கிய காரணம். தேவையில்லாத விசயங்களை ஊட்டி வளர்க்கிறார்கள். அவசியமான விசயங்களை கடுகளவும் சொல்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் பலர் டயம் பாஸ்காக ஆசிரியர் பணிக்கு வருவதாக தாங்களே பகிரங்கமாக பெருமையடித்துக் கொள்கிறார்கள். இந்த பக்கம் இப்படி இருக்க மாணவிகளை குறை சொல்லி ஒரு பயணும் இல்லை தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக